சாதிக்கலாம்

Posted On - 19 Mar 2017

"அப்பா சாதின்னா என்னப்பா? நாம என்ன சாதிப்பா...?" 

"அதப்பத்தி நீ எதுக்குப்பா தெரிஞ்சுக்கணும்... நீ உன் லட்சியத்துல நிலையா நின்னு, அதுக்கு இப்ப என்ன தேவையோ அத மட்டும் நல்லா கஷ்டப்பட்டு செஞ்சு, உன்னோட வாழ்க்கையில சாதிப்பா...!" 

"இல்லப்பா... ஸ்கூல ரெண்டு பிரண்டு பேசிக்கிட்டாங்க... டே அவன் நம்ம சாதி இல்ல.. அவங்கிட்ட பேசாதடான்னு... அப்படீன்னா அவங்க வீட்ல இதப்பத்தி சொல்லி இருக்காங்கன்னு தானேப்பா அர்த்தம்... அப்ப அந்த பசங்க வாழ்க்கையில எதையும் சாதிக்க மாட்டாங்களாப்பா?" 

"இந்த வயசுல சாதிய பத்தி பள்ளிக்கூடத்துல பேசறாங்கன்னா, கண்டிப்பா அவங்க வீட்ல இதப்பத்தி பேசியிருக்காங்கன்னுதான் அர்த்தம்.... அது கண்டிப்பா அவங்க அப்பா அம்மாவோட தப்பு தான்... இந்த மாதிரி பள்ளிக்கூடத்திலேயே பிரிவினை பாக்கறவங்க எப்படி வாழ்க்கையில சாதிக்க முடியும்? நீ இதப்பத்தியெல்லாம் அதிகம் யோசிக்காம உன் படிப்பில கவனம் செலுத்து.... சரியா?" 

"சரிப்பா..." 

(மனதிற்குள்: சாதி எல்லா இடத்திலேயும் பரவித்தான் கிடக்கு... சில உரிமைகளை கிடைக்காதவங்களுக்கு கிடைக்கணும்னு நெனச்ச போது பாக்கப்பட்ட சாதி, இன்னைக்கு பள்ளிக்கூடத்துல இருந்து, கல்யாணம், அரசியல்னு எங்க பாத்தாலும் புல்லு போல மொளச்சுக்கிடக்கு... அது எங்க வேணா இருந்துவிட்டுப் போகட்டும்.. அத பள்ளிக்கூடம் போற பிஞ்சுங்க மனசுல விதைக்காம இருந்தாலே போதும்.. ஒரு காலத்துல எல்லோருமே அத மறக்க ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.... அந்த நாள் என் வாழ் நாளிலே வந்துவிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும்....)