ஒமானில் இளமை ஊஞ்சலாடுகிறது

Posted On - 14 Mar 2017

ஒமானுக்கு உத்தியோகம் கிடைத்து போகப்nபோகிறேன் என்று என் இனத்தவர்களுக்குச் சொன்னவுடன் உனக்கு என்ன பைத்தியமா?, தண்ணியிலலா அந்த வனாந்தரத்துக்கு போய் என்ன செய்யப்போகிறாய் குளிக்கிறதுக்கு கூட தண்ணீர் கிடையாதே” என்றார்கள் அவர்கள். என் பணப்பிரச்சனையை அவர்களுக்கு விளக்கினால் அவர்கள் என்ன வட்டியில்லாமல் கடன் தரவாப் போகிறார்கள். எல்லோரும் புது வீடு கட்டுகிறாரார்கள் என்று நானும் கலியாணமான புதுசில் என் மனைவியின் இனத்தவருக்;கு என்னைப் பற்றி பெருமையாக விளம்பரப் படுத்த, இருந்த வீPட்டை திருத்தயமைக்கும் செயலில் விஷயம் தெரியாமல் காலை வைத்தேன். கையில் இருந்ததோ கொஞ்சக் காசு. கடைசியில் வங்கியை தஞ்சம் அடைந்தேன். அதுவும் மனேஜர் பழக்கமாகையால் ஏதோ கொஞ்சக் காசை கடனாக வாங்க முடிந்தது. மிச்சம் புரோநோட் தான். வீடு கட்டி முடிய 50,000 ரூபாய் கடன். இந்த நிலையில் தான் ஓமான் வேலை மாதம் 600 ஒமானி ரியால் சம்பளத்தில் கிடைத்தது. 1977ல் அது பெரிய சம்பளம் ஏன் என்றால் அந்நேரத்தில் ஒரு ரியால் 45 சீறிலங்கா ரூபாவுக்கு சமன். அதைவிட என் குடும்பம் தங்க, தளபாடங்களுடன் கடற்கரை ஓரமாக இரண்டறைகள் கொண்ட வீடு. கணக்குப்போட்டுப் பாரத்தேன். சாப்பாடு மற்றும் செலவு போக குறைந்தது 400 ரியால் மாதத்துக்கு மிச்சம் பிடிக்கலாம். எப்படியும் ஆறு மாதத்திலை கடனைத தீர்த்துப் போடலாம். எவர்கள் ஓமானைப்பற்றி என்ன நாக்கு வலைத்தாலும் எனக்கு கைகொடுக்கப் போவது அந்த பாலைவளம் தான் எனத் தீர்மானித்து முதலில் நான் பிளேன் ஏறினேன். இடம் படித்துகொண்டால் என் மனைவியையும் மகளையும் ஒரு மாதத்துக்குள் கூப்பிடலாம் என்று திட்டம் போட்டேன். 

நான் ஒமானுக்குப் பிளேன் ஏற முன், முதல் நாள், 
“என்ன அத்தான் நானும் பிள்ளையும் அவசியம் ஓமானுக்கு வரவேண்டுமா?” என்று ஒரு குண்டை என் தலையில் தூக்கிப்போட்டாள் என மனைவி;. நாங்கள் திருமணமாகி ஆறுவருடங்கள். அது தான் முதற் தடவை நான் என் குடும்பத்தை விட்டு பிரியப்போகிறேன். 

“அவன் ஒமான்காரன் வாடகையில்லாமல் வீடு, வீட்டுச் சாமான்கள்;, போக்குவரத்துக்கு கொம்பெனி கார் எல்லாம் தாரான். வருஷம் ஒரு தடவை முப்பது நாள் லீவோடு, குடும்பத்தோடு ஊருக்கு வந்து போக பிளேன் டிக்கட் வேறு தாரான். நீங்கள் அங்கை வருவதற்கு என்ன பிரச்சனை ?” என்றேன் நான். 

“ இல்லை அங்குள்ள அரபிகள் ஒரு மாதிரியாம். பெண்களைக் கண்டால் தூக்கிக் கொண்டு போய்விடுவார்களாம். அது தான் “ என்று இழுத்தாள் அவள். 

அவள் வீரகேசரியில் தொடர்கதையாக வந்த அலிமா ராணி என்ற அரபு நாட்டுக்கதையை அவள் தொடர்ந்து வாசித்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. ஓ கோ அது தான் அவள் மனதில் வேலை செய்யுதாக்கும் என்று யோசித்தேன். 
“ஒன்றுக்கும் யோசிக்காதீர். அங்கை தமிழ் குடும்பங்கள் இல்லாமலா போகப்போகுது. நான் போய் ஒழுங்குகள் செய்து போட்டு விசாவும் டிக்கட்டும் அனுப்புகிறன் நீரும் பிள்ளையும் யோசியாமல் வாரும். கொஞ்சக் காலம் இருந்து பார்ப்போம. பிடிக்காட்டால திரும்புவம்.;;“ 

****** 
ஒமான் சீப் ( Seeb) எயார்போட்டில் பிளேன் இறங்கமுன் பிளேனின் ஜன்னலுக்கூடாக எட்டிப்பார்த்தேன்;. ஒரே மணல் திட்டிகள் நிறம்பிய பாலைவனம். கட்டடிஙகள் சில அஙகொன்றும் இஙகொன்றுமாகத் தெரிநதது. ஓ மான் ( Oh man) என்று ஆங்கிலத்தில் என்ற என்னையறியாமல் கூறினேன். என்னுடன் வேலையில் சேர வந்தவர் சிரித்துப்போட்டு ஓம் மான் நீ ஓமானுக்குத் தான் போறீர் என்றார் நகைச்சுவையுடன். ஒரு பக்கம் மலைத் தொடர் தெரிந்தது. மரங்களை விரல்விட்டு எண்ணலாம். தோன்றிய மரங்கள் எல்லாம்; ஈச்சமரங்கள். ஒட்டகங்களைத் தேடினேன.; காணவில்லை. எயார்போர்டில் இறங்கியபோது பகல் பத்துமணி. கொளுத்தும் வெய்யில். ஒருவரும் குடை பாவிப்பதாகக் காணோம். வானத்தில் மேகக் கூட்டத்தை தேடவேண்டியிருந்தது. மழை பெய்து பல மாதங்களோ?. வெப்பநிலை 40 பாகையிருக்கும்;. என்ன செய்வது? கடனை அடைத்தாகவேண்டுமே. இதையெல்லாம் பார்க்க முடியுமா என்றது என் மனம். 

ஒரு மாதத்துக்குள் என் குடும்பம் வந்து சேர்ந்தது. அவர்கள் வரமுன் குளிர் பெட்டி நிறம்ப, விதம் விதமான பழங்கள் , கட்பெரீஸ் சொக்லேட், சாப்பாட்டு சாமான்களை நிறப்பி வைத்தேன். அத்தோடு ஒரு கறுப்பு - வெள்ளை டிவியைக் கூட பொழுதுபோக்கிற்காக வாடகைக்க எடுத்தேன். அதில் சில மணி நேரத்துக்குத் தான் ஆங்கில நிகழ்ச்சிகள் நடைபெறும். எல்லாம் மனைவியை சநதோஷப்படுத்தத்தான். எயார்போட்டல் மகளுடன் வந்திறங்கிய போது முணுமுணுத்த என்மனைவி எயர்கொண்டிஷன் வீட்டையும் குளிர் பெட்டி நிறைய கட்பெரீஸ் சொக்லேட்டுகளையும் கண்டவுடன் சற்று சாந்தமானாள். நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகே ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயர் குடும்பமும், கேரளாவைச் சேர்ந்த குடும்பமும் வாழ்ந்தார்கள். அது அவளுக்கு மன நிம்மதியைக் கொடுத்தது. 

******* 

நான் வேலை செய்த ஒமான்டெல் என்ற தொலை தொடர்பு ஸ்தாபனத்தில் மெயின் கேட்டின் காவல்காரன் அகமது மொகமது பின் ஹைதர் அலி. நீண்ட பெயரானாலும் எல்லோரும் அவரை அலி என்றுதான் கூப்பிடுவார்கள். அலிக்கு குறைந்தது 75 வயது இருக்கும் என்பது என் கணிப்பு. ஆனால் ஆளைப்பார்த்;தால் இன்னும் பல் விழாத முறுக்கேறிய உடம்பு. நடையில் ஒரு கம்பீரம். கூனல் கிடையாது. கையில் எப்போதும் ஓமானிகளுக்குரிய ஒரு தடி. இடுப்பில் ஆண்மகனின் வீரத்தையும,; ஒமானின் மரபு வழி வந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் முனையில் சற்று வளைந்த, தோல் உறைக்குள் உள்ள கத்தி. அந்த கத்தியை நான் ஒமான் நாட்டின் கொடியில,; அரச சின்னத்தில் பார்த்திருக்கிறேன். முழு உடம்பையும் மறைக்கும் வெள்ளை நிற ஒமானி உடுப்பையே அவர் எப்போதும் அணிவார். ஆண்மையை வெளிபடுத்தும் நரைத்த சாயம் பூசப்பட்ட நீண்ட தாடி. முகத்தில் முதிர்வைப் காட்டும் சுருக்கு விழுந்திருந்தாலும் தான் இளமை தோற்றம் உள்ளவர் என்பதை வெளிப்படுத்த பல யுக்திகளைக் கையாண்டுள்ளார் என்பதை காணக்கூடியதாகயிருந்தது.. 

ஒமானில் வந்து குடியேறிய சன்ஸிபாரி அல்லது பலூச்சி இனத்தைச் சேர்ந்தவன் தானல்லவெனவும், தனது பூர்வீகம் ஒமானின் தென் பகுதியான சலாலா (ளுயடயடயா) வென்றும,; தான் டோபரி இனம் என்றும் தன் இனத்தைபற்றி அடிக்கடிச் சொல்லுவார். டொபாரிகள் தான் ஒமான் பூமியின் மைந்தர்கள்; என்பது அவர் கருத்து. தனது தந்தை, தற்போது ஒமானை ஆளும் சுல்தான் கபூசின் தந்தைக்கு மெய்காப்பாளனாக இருந்தவர், தான் சிறுவயதில் சுல்தானுடன் பழகி இருக்கிறேன் என்று அடிக்கடி தம்பட்டம் அடிப்பார். அக்காலத்தில் பிரித்தானிய கொம்பெனியான “கேபில் அண்ட் வயர்லஸ்” ( ஊயடிடந ரூ றுசைநடநளள) ஒமானின் தொலை தொடர்பு சேவையை பரிபாலனம் செய்தது. அங்கு பலர் பிரித்தானியர் வேலை செய்தனர். அதனால் அந்த ஸ்தாபனத்தில் வெகு காலம் வேலைசெய்து அவர்களுடன் பேசிப் பழகிய அலிக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியும். நான் சிறீலங்காவை சேர்ந்தவன் என்று அறிந்ததும் அவர் முதல் கேட்ட கேள்வி “ அங்கு வீட்டு வேலைக்கு நல்ல வடிவான, இளமையான முஸ்லீம் பெண் கிடைக்குமா?” என்பது தான். 
அட கடவுளே இந்த வயதிலும் வடிவு பார்க்கிறார் கிழவர் என்றது என் மனம். 

“அது சரி அலி உங்கள் வீட்டில் வீட்டு வேலை பார்க்க மனைவியில்லையா என்றேன்”. 

அப்போது தான் அவர் தனது திருமணவாழ்க்கையின் அனுபவத்தை விளக்கமாய் சொன்னார். தனக்கு 25 வயதாக இருக்கும் போது ஒரு டோபாரி இனப் பெண்ணை திருமணம் செய்ததாகவும். அவள் இரு குழந்தைகளை ஈன்றெடுத்த விட்டு பத்து வருட தாம்பத்திய வாழ்க்கைக்குப் பின் இறந்து போனதாகவும். அதன் பின் பாக்கிஸ்தான் பெண்ணை மணம் முடித்ததாகவும் அவள் பாக்கிஸ்தானுக்கு போய் திரும்பி வரவில்லை என்றும் குறைப்பட்டார். அதற்கு பிறகு மூன்றாம் முறை கலியாணம் செய்ய சிந்திக்கவிலலையா என்று நான் கேட்டபோது “ ஏன் இல்லை எனது அறுபது வயதில் 10,000 ரூபாய் காசு கொடுத்து இந்தியாவில் உள்ள ஹைதரபாத் நகரத்து இளம் பெண் ஒருத்தியை மணமுடித்தேன். அவள் என்னோடை ஐந்து வருடம் வாழ்;ந்த பின் என் வீட்டில் கூலி வேலை செய்த பாக்கிஸ்தானைச் சேர்ந்த பட்டாணி ஒருவனுடன் ஓடிப்போய்விட்டாள் “ என்று குறைப்பட்டார். 

“மூன்று நாடுகளில் பெண்ணெடுத்தும் நல்ல மணவாழ்க்கை அலிக்கு கிடைக்காததையிட்டு கவலைப்பட்டேன். தனது ஒரு மகன் ஒமான் பொலீசில் வேலை செய்வதாகவும் மகள் டுபாயுக்கு திருமணமாகி சென்றுவிட்டதாகவும் சொன்னார். தன்னை கவனிக்க தனக்கு ஒரு பெண் தேவையென்றும் முடிந்தால் நல்ல இளம் முஸ்லீம் பெண்ணொருத்தியை வீட்டு வேலை பார்க்க ஒழுங்கு செய்ய முடியுமா எனக் கேட்டார். அவரின் எண்ணம் எனக்கு புரிந்தது. அவர் மனதில் இளமை ஊஞ்சல் ஆடுகிறது. இன்னமும் எத்தனைத் தடவையும் திருமணம் செய்யத் அவர் தயார். அவரை ஊஞ்சலில் வைத்து ஆட்ட ஒரு பெண் அவசியம் தேவைப்படுகிறது. பாவம் தனிமை, இந்த வயதில் கிழவனை வாட்டுகிறது போலும். “பார்ப்போம்” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு சென்று விட்டேன். அதன்பின் தூரத்தில் அலியைக் கண்டால் விலகிப்போவேன். 
என் மனைவிக்கு அலியைப் பற்றி சொன்னபோது “ பார்த்தியளா. நான் ஒமானுக்கு வர பயப்பட்டது இதுக்குத்தான். அந்த அரபிக்காரனை எந்தக் காரணத்தைக்கொண்டும் வீட்டுக்கு கூட்டி வரப்படாது” என்று கட்டளையிட்டாள். எனக்கு விளங்கியது அவள் பயம். 

இரண்டு மாத இடைவெளிக்குபிறகு அலியை கேட்டடியில் கண்டேன் நரைத்த தலைமயிருக்கு சாயம் பூசி சற்று மகிழ்ச்சியுடனும் இளமைத் தோற்றத்துடனும்; காணப்பட்டார். அவர் மேல் இருந்த அத்தர் வாசனை என் மூக்கைத் துளைத்தது. அவரின் பார்வையிலிருந்து என்னால் தப்பமுடியவில்லை. “எப்படி அலி சுகம்?. என்ன ஒருமாதமாய் உம்மை காணக்கிடைக்கவில்லையே” என்றேன்; ஏதோ அவரைக் காணாதது எனக்கு கவலைபோல் என் பேச்சு இருந்தது 

என் கையில் ஈச்சம்பழத்தை தந்து “பையா நான் இப்ப புது மாப்பிள்ளை” என்றார் புன்சிரிப்புடன். 
“என்ன இந்த கிழட்டு வயதிலும் கலியாணமா” என்றது என் மனம். ஆனால் அதை அலிக்கு வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. பதிலுக்கு “அப்படியா. சந்தோஷம். பெண் எந்த நாடு ?” என்றேன் விடுப்பறிய. 

“வேறு எங்கே?. திரும்பவும் ஹைதரபாத்தான். நீர் தான் சிறீலஙகாவில் பெண் எடுக்க உதவவில்லையே. இந்த முறை கலியாணச் செலவு கொஞ்சம் அதிகம். பெண்ணுக்கு 18 வயது. வடிவானவள். கொஞ்சம் படித்தவள். அதனாலை அவள் குடும்த்துக்கு 30,000 ரூபாய் கொடுத்தனான். “ என்றார் பெருமையாக அலி. 

“அடபாவி. பேத்தியின் வயதுள்ள பெண்ணை மனைவியாக எடுத்திருக்கிறாயா?. இந்தத் திருமணம் எவ்வளவு காலத்துக்கு நிலைக்கப் போகுது” என்று எனக்குள் யோசித்தேன். 

“என்ன பையா யோசிக்கிறாய். இது எனது நாலாவது கலியாணம். வந்தவள் வயது குறைந்தவள் என்று நான் யோசிப்பதில்லை. ஒட்டகப்பாலும், இறச்சியும், ஈச்சம் பழமும் என்னை இன்னும் இளமை குறையாது காட்டுகிறது. என் இளமை போகாமலிருக்க மருந்து கூட எடுக்கிறன். என் அண்ணன் முபாரக் என்னிலும் இரண்டு வயது கூட. அவனுக்கு ஒரு வருஷத்துக்கு முன் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. என்னாலும் அவனைப் போல் பெற முடியும்” என்று சவால் விட்டார் அலி. 

நான் பதில் பேசவில்லை. அவரின்; திருமணவாழ்க்கை சந்தோஷமாக இருக்க வாழ்த்தி நகர்ந்தேன். 


****** 


சுமார் இரு மாதஙகளுகடகுப் பின்; ஒரு நாள் என்னுடன் வேலை செய்த கேரளக்காரனான் வர்கீஸ் ஒரு லிஸ்டோடை வந்தார.; 

“என்ன வர்கீஸ் லிஸ்டும் கையுமாக” என்றேன். 

“வேறு ஒன்றுமில்லை சேர், வாட்ச்மென் அலி இன்று காலை இறந்திட்டார். அதுக்குத்தான் கலக்ஷென்.“ 

“என்ன அலி இறந்திட்டாரா?. அட கடவுளே என்னால் நம்பமுடியவில்லையே. சில மாதங்களுக்கு முன்புதானே ஹைதரபாத்துக்கு போய் கல்யாணம் செய்து கொண்டு வந்தவர்” என்றேன். 

வர்கீஸ் சிரித்தான். “ஏன் வர்கீஸ் சிரிக்கிறாய்” என்றேன். 

“பாவம் மனுசன்; தனக்கு இளமை திரும்பி தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க ஏதோ கண்ட மருந்தைச் சாப்பிட்டிருக்கிறான் அது இருதயத்தை தாக்கியிருக்கிறது” என்றான் வர்கீஸ் 

”என்னிடம் கூட இந்தியாவில் இருந்து மதனகாம லேகியம் எடுத்து தரும்படி கேட்டவர்”. என்றார் பக்கத்திலிருந்த கீழக்கரைக்காரர் முகமது. 

நான் கருத்து தெரிவிக்கவில்லை. அலியுடன் பழகிய தோஷத்துக்காக லிஸ்ட்டில் இருபது ரியால் போட்டேன். ஹைதராபாத் 18 வயது பெண்ணை நினைக்க எனக்கு பரிதாபமாக இருந்தது. இப்படி எத்தனை வெளிநாட்டு பெண்கள் அரபியர்களின் பணத்துக்காக பலியாகிறார்களோ?. அன்மையில் வீட்டு மாடியிலிருந்து தற்கொலை செய்த சீறிலங்கன் ஹவுஸ்மெயிட் பரீதா தான் என் நினைவுக்கு வந்தாள்.