மழலை மனம்

Posted On - 14 Mar 2017
blog

 ஒரு நாள் அம்மாவின் தோழி வீட்டிற்கு சென்ற பொழுது ஒரு குழந்தையின் உள்ளம் கண்டு அதிசயித்து போக நேர்ந்தது. அங்கு ஒரு பெண் குழந்தை, பள்ளி முடிந்து அப்போது தான் வீடு திரும்பி இருந்தாள். அவள் அழுதுகொண்டே அம்மாவிடம் வந்து “மேடம், தப்பு போட்டுட்டாங்க அம்மா “, என்று அழுதபடி தன் விடைத்தாளைக் காட்டியது. “தென்னை மரத்தின் பாகங்களின் பயன் என்ன?” என்பது கேள்வி. அதற்குக் குழந்தை எழுதிய பதில் தவறு என்று ஆசிரியர் போட்டிருந்தார். 


சரி குழந்தை என்ன எழுதி இருக்கிறாள் என்று பார்த்தேன். ஆசிரியர் சொல்லிகொடுத்த பதில் – தென்னை குச்சி துடைப்பம் செய்யவும், ஓலை கூரை வேயவும், தேங்காய் உணவுக்கும், தேங்காய் எண்ணை எடுக்கவும் பயன் படும் என்று சொல்லி கொடுத்திருக்கிறார் போலும்.....அன்றைய தினம் குழந்தையால் பள்ளி செல்ல இயவில்லை, ஆதலால் தனக்கு தோன்றியதை தெளிவாக விடைத்தாளில் எழுதியிருந்தாள். 


அவளின் பதில் கண்டு திகைத்து போனேன். 

குழந்தையின் பதில் :- 

“தென்னை மரத்தில் இனிப்பான இளநீர் இருக்கும். அது கெடாமல் இருக்க அதைச் சுற்றி ஓடு இருக்கும். அதன் பேர் கொட்டாங்குச்சி தேங்காய். தேங்காய் எல்லாம் கனமாக இருக்கும். அதை பிடித்துக்கொள்ள மட்டைகளும் ஓலைகளும் இருக்கும். இது எல்லாம் ரொம்ப கனமாக இருப்பதால் அதைத்தாங்க ஒரு பெரிய மரம் இருக்கும். அந்த மரம் விழாமல் இருக்க வேர்கள் இருக்கும். மட்டைகளுக்கு மேல் குருவி கூடு கட்டுவதால் நிழல் அளிக்க ஓலைகள் இருக்கும். இதுதான் தென்னை மரத்தின் பாகங்களின் பயன்கள். 

குழந்தை எழுதியது அதனது பார்வையில் சரிதானே ! குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத பதில், இயற்கையை இயற்கையாக பார்க்கும் விதம், அனைத்தும் மழலையாக ரசிக்கும் உள்ளம், எல்லாம் வளர்ந்த பின், ஏனோ, இயற்கை தந்துள்ள எல்லாம் அவனுக்காகவே படைக்கப்பட்டுள்ளது என்று எண்ணம் பிறக்கின்றது. அவற்றை ஆக்கிரமித்து வாழ்வதையே குறிக்கோள் ஆக்கி கொண்டு வாழ்வை தொலைத்து விடுகிறான். வாழ்க்கை அனுபவமே வாழ்க்கையின் லட்சியம் என்று அறியாமல் ஏதோ ஒன்றின் பின்னே ஓடும் மனிதன் தன் வாழ்வை முழுவதுமாக வாழ்வதில்லை.இலக்கை அடையும் போது “அடச்சீ இவ்வளவு தானா இது? இதற்காகவா இத்தனை அவதிப்பட்டேன்?” என்று எண்ணுகிறான். 

முடிவில் வருந்தி என்ன பயன்? 
முன்னரே சிந்தித்திடுவோம்!