குறைபாடே இல்லாத குழந்தை சாத்தியம்!

Posted On - 13 Sep 2016
blog

தென்னிந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தையான கமலரத்தினத்தை 1990லேயே தமிழ் மண்ணில் தோன்றச் செய்தவர் டாக்டர் கமலா செல்வராஜ். அப்போது பல்வேறு சந்தேகங்கள் எழும்பின. அவர்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா என்ற கேள்விக்கணைகள் எழுந்தன. எல்லாவற்றையும் முறியடிக்கும் வகையில் கடந்த ஆண்டு லை மாதம் கமலரத்தினத்துக்கும் பிரசவம் பார்த்து வெற்றி கண்டவர் டாக்டர் கமலா செல்வராஜ். மகப்பேறு மருத்துவத்தில் உள்ள நவீன  தொழில்நுட்பங்கள் குறித்தும், அவரது மருத்துவ வாழ்வில் மறக்க முடியாத சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

‘‘மகப்பேறு மருத்துவத்தில் - அதுவும் சோதனைக்குழாய் குழந்தை சிகிச்சை முறையில் நிறைய முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. புதுப்புது யுக்திகள், தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இதில் குறிப்பாக எம்பிரியோஸ்கோப் (Embryo Scope), ப்ரீ-இம்ப்ளான்டேஷன் ஜெனடிக் ஸ்கிரினிங் (PGS), ப்ரீ-இம்ப்ளான்டேஷன் ஜெனடிக் டயக்னாசிஸ் (PGD) போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கனவே இருந்தாலும், இப்போது மேலும் விரிவடைந்து கொண்டிருக்கிறது. மேலைநாட்டுக்கு ஈடாக நாமும் வளர்ந்துள்ளது பெருமை தரும் விஷயம்.

இணைந்த கருவினை மரபணு பரிசோதனை (PGD) செய்து மூன்றாவது தினத்தன்று பல அணுக்களாக மாறியதும், அதில் ஒரு அணுவை எடுத்து பரிசோதிக்கிற சிகிச்சையை எங்கள் மருத்துவமனையில் செய்கிறோம். அது நல்ல குழந்தையை உருவாக்கக் கூடியதா, உருவாக்கத் தகுதியற்றதா என்று அறிந்த பின் நல்ல கருவை பிளாஸ்டோஸிஸ்ட் வரை வளர வைத்து கருத்தரிக்க செய்தல் என்னும் முறையை செய்து வருகிறோம். இதில் 100% குறைபாடு இல்லாத குழந்தையை உருவாக்க முடியும்.

சோதனைக்குழாய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு தம்பதியும் கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இந்தச் சிகிச்சையானது  பணம் பார்க்கும் வியாபாரமாகவே ஆகிவிட்டது. டீக்கடை போல வீதிக்கு வீதி சோதனைக்குழாய் மையங்கள் வந்துவிட்டன. இது மிகவும் கவலை அளிக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசு தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்பதியினர் சிகிச்சைக்கு செல்லும் போது அந்த மருத்துவமனை அரசு அங்கீகாரம் பெற்றதா என அலசி ஆராய்ந்த பிறகே சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

எனக்கு தென்னிந்தியாவின் முதல் சோதனைக்குழாய் குழந்தை கமலரத்தினம் பிறக்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் ஏற்படுகிறது. அதில் ஒரு பெண்மணியின் நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவருக்கு வயது 48 இருக்கும். அவர் தன்னுடைய வளர்ந்த இரு இளம் மகன்களையும் ஒரு சாலை விபத்தில் இழந்து விட்டார். அந்தத் தம்பதி என்னிடம் கதறி அழுது எனக்கு மறுபடியும்  அந்த குழந்தைகள் வேண்டும்... 

எப்படியாவது திரும்ப கொடுங்கள்’ என கண்ணீர் விட்டனர். நானும் அவர்களுக்கு அந்த வயதையும், அவர் ஓர் இதய நோயாளி என்பதையும் பொருட்படுத்தாமல் தக்க சிகிச்சை அளித்து, அதில் வெற்றியும் கண்டேன். குறிப்பிட்ட பிரசவ தேதிக்கு முன்பே வலி ஏற்பட்டதால், அவசர அறுவைசிகிச்சை செய்து அழகான ஆண் குழந்தையை எடுத்து விட்டோம். தாயும் சேயும் நன்றாக இருந்தனர். தாய் ரெக்கவரி படுக்கை அறையில் இருந்தபோது திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ‘கார்டியாக் அரஸ்ட்’ ஆனது. உடல் முழுவதும் நீல நிறமாக மாறிவிட்டது.

உடனே அவருக்கு செயற்கை சுவாசம் ஏற்படுத்தி, மிகவும் துரிதமாக கார்டியாக் ஷாக்’ கொடுத்து உயிர் பிழைக்க வைத்தோம். எங்களால் அந்த நிகழ்வை மறக்கவே முடியாது. அவர்கள் தாய் மற்றும் குழந்தையுடன் வீடு திரும்பும் போது, நான் ஊரில் இல்லாததால், எனக்காகவே சென்னையில் தங்கி, நான் வந்த பிறகு என்னுடைய ஆசீர்வாதம் பெற்ற பிறகே வீடு திரும்பினார்கள்’’ என நெகிழ்கிறார் டாக்டர் கமலா.

மகப்பேறு மருத்துவத்தில் இந்திய அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்.  சோதனைக்குழாய்  குழந்தையில் இருந்து செயற்கை கருத்தரிப்பு மையம் வரை பல புதிய  தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக கையாண்டவர். சோதனைக்குழாய் மூலம் உருவாக்கிய 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்றும் இவரது  பெயரை அன்புடன் உச்சரிக்கிறார்கள்